நிஜத்தில் முதலமைச்சரானால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன்; உண்மையாக இருப்பேன்: விஜய்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன்
பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’.
தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா
சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் விஜய் பேசுகையில், ''எல்லோருக்கும் வணக்கம். என் நெஞ்சில் குடியிருக்கும் எனது நண்பர்கள்,
நண்பிகள் அனைவருக்கும் வணக்கம். நெஞ்சில் குடியிருக்கும்னு இப்போ
சொல்லத் தோணுது.
ரசிகர்களைப் பார்க்கணும்னு ஆர்வமா
இருக்கு. என் படங்களின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களைப் பார்க்க வேண்டும்
என்பதற்காகத்தான் இசை வெளியீட்டு விழா நடத்தி, அதில்
கலந்துகொள்கிறேன்.
சர்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைத்தது சர்காருக்கு ஆஸ்கர் விருது கிடைத்த மாதிரி. நாங்கள் சேரும்போதெல்லாம்
வெற்றிப்படம் மட்டும் கொடுப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். விவேக் எங்களுடன் இணைந்து பாடல்
எழுதும்போது தானாக ஒரு மேஜிக் நிகழ்கிறது. மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது.
சர்காரின் அரசியலில் மெர்சல் இருக்கும்.
கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்த
குறுகிய காலகட்டத்தில் சாவித்ரி அம்மா மாதிரியான நடிகையைக் கண்முன் நிறுத்துவது
சாதாரண விஷயமல்ல. அதை கீர்த்தி சுரேஷ் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். அவருக்கு
என் வாழ்த்துகள்.
ஒரு கேரக்டரில் வரலட்சுமி
நடிப்பதாகச் சொன்னார்கள். வர்ற லட்சுமியை வேணாம்னு சொல்லக்கூடாது பாருங்க. வேற
யாரும் பண்ண முடியாத அளவுக்கு நடிச்சிருக்காங்க. யோகி பாபுவின் அசுர வளர்ச்சி
பிரம்மிக்க வைக்கிறது. நான் வளர்ச்சி என்றது அவரது முடியை அல்ல, கெரியரை. ராதாரவி சார் அவரது தந்தை எம்.ஆர்.ராதா மாதிரி நடிப்பில்
பின்னியிருக்கிறார். நாளைய தீர்ப்பு என் முதல் படம். அவர் அதில் என் அப்பாவாக
நடித்தார்.
வெற்றிக்காக எவ்ளோ வேண்டுமானாலும்
உழைக்கலாம். ஆனா, ஒரு கூட்டம் வெற்றிபெறக் கூடாதுன்னு உழைக்கிறாங்க.
உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருந்தா
வாழ்க்கை ஜம்முன்னு இருக்குமாம். வந்திருக்கும் அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கும் என்
நன்றிகள்.
தேர்தலில் நின்று ஜெயித்து சர்கார்
அமைப்பாங்க. நாங்க சர்கார் அமைத்து தேர்தலில் நிற்கப் போகிறோம். நான் படத்தைச்
சொன்னேன். பிடித்திருந்தா படத்துக்கு ஓட்டு போடுங்க.
நிஜத்தில் முதலமைச்சரானால்
முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன் என்பதையே சொல்ல வருகிறேன்'' என்றார் விஜய்.

Comments
Post a Comment